திட்டம் இரண்டு (Plan B) திரைப்பட விமர்சனம் | Thittam Irandu Movie Review
திட்டம் இரண்டு (Plan B) திரைப்பட விமர்சனம்
படக்குழு:
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், அனன்யா ராம் பிரசாத் மற்றும் பலர்.
இசை: சதீஷ் ரகுநாதன்
ஒளிப்பதிவு: கோகுல் பினோய்
எடிட்டிங்: C.S.பிரேம்குமார்
தயாரிப்பு: சிக்ஸர் என்டர்டெய்ன்மென்ட் & மினி ஸ்டுடியோ
இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்
OTT: சோனி லைவ் (Sony LIV).

கதைச்சுருக்கம்:
போலீஸ் அதிகாரியாக வரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் (ஆதிரா), பணியிடை மாற்றம் காரணமாக சென்னைக்கு வருகிறார். இவரது நெருங்கிய தோழி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வருகிறது, இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்கும் திருப்பங்கள் என்ன? யார் கொலை செய்தது? எதிர்பாராத கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என்கிற பல முடிச்சிக்களை அவிழ்க்கும் சுவாரஸ்யமே மீதிக்கதை.

FC விமர்சனம்:
ஒவ்வொரு படத்திற்கும் மாறுபட்ட கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால், எந்தவித மிடுக்கான பாவனைகளும் இன்றி இயல்பாக நடித்துள்ளது அருமை. அதேபோல் சுபாஷ் செல்வம், ஆடை படத்தில் நடித்த அனன்யா ராம் பிரசாத் உள்ளிட்டோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் வரும் நடிகர்களும் கொடுத்த வேலையை அருமையாக செய்துள்ளனர்.
சதீஷின் இசையில் முதல் பாடல் மனதை வருடும் பாடலாக அமைந்துள்ளது, பின்னணி இசையை பொறுத்தவரை கிரைம் திரில்லர் படங்களுக்கே உரித்தான இசைதான், எனினும் குறையில்லை. அதேபோல் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நேர்த்தி. ஒரு கொலை நடக்கிறது அதற்கு யார் காரணம்? என்கிற ஒற்றை வரியில் உலகில் லட்சக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. அதிலிருந்து இது என்ன வித்தியாசம் என்றால், பெரிய வித்தியாசமில்லை. ஆனால், காட்சியமைப்புகள் படி பல ஸ்மார்ட்டான நுணுக்கங்களை கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

கதைப்படி நாம் யூகித்து இதுதான் நடந்திருக்கும், இவன்தான் கொலைகாரனாக இருக்கும்? என நாம் நினைத்து கொண்டிருக்கையில் வேறு தளத்தில் பயணிக்கிறது திரைக்கதை. இது எத்தனை பேரை நிறைவு செய்யும் என தெரியவில்லை, ஆனாலும் புதிய முயற்சி. படத்தின் குறையாக தெரிவது முதலில் ஏகப்பட்ட இடங்களில் லாஜிக் மீறல்கள், அடுத்து கதாப்பாத்திர வடிவைமைப்பு, மேலோட்டாமாகவே பல கதாப்பாத்திரங்கள் வந்து செல்வது சிறிது நெருடல் தான். மற்றபடி நல்ல கதைக்களம், ஸ்மார்ட்டான திரைக்கதை, டுவிஸ்ட் கிளைமாக்ஸ் என தனது முதல் படத்திலே அசத்தியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இறுதியாக கிரைம் திரில்லர் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திபடுத்தும் இந்த திட்டம் இரண்டு.
Thittam Irandu/Plan B Movie FC Rating: 3.5 /5
Leave Comments
Post a Comment