நவரசா ஆந்தாலஜி திரை விமர்சனம் | Navarasa Review
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
படக்குழு முழு விவரம்:
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் (மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன்).
நவரசா ஆந்தாலாஜியில் இடம்பெற்றுள்ள 9 கதைகளின் நடிகர்கள், இயக்குனர் விவரம்:
1 - ‘கிடார் கம்பியின் மேலே நின்று’ (காதல்)
நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்
இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்
2 - ‘எதிரி’ (கருணை)
நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி
இயக்குநர் - பெஜோய் நம்பியார்
3 - ‘புராஜக்ட் அக்னி’ (ஆச்சர்யம்)
நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா
இயக்குநர் - கார்த்திக் நரேன்
4 - ‘பாயாசம்’ (அருவருப்பு)
நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்
இயக்குநர் - வசந்த் எஸ். சாய்
5 - ‘அமைதி’ (அமைதி)
நடிகர்கள் - பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்
இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்
6 - ‘ரௌத்திரம்’ (கோபம்)
நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்
இயக்குநர் - அரவிந்த் சுவாமி
7 - ‘இன்மை’ (பயம்)
நடிகர்கள் - சித்தார்த், பார்வதி திருவோத்து
இயக்குநர் - ரதீந்திரன் ஆர். பிரசாத்
8 - ‘துணிந்த பின்’ (தைரியம்)
நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்
இயக்குநர் - சர்ஜூன்
9 - ‘சம்மர் ஆஃப் 92’ (நகைச்சுவை)
நடிகர்கள் - யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு
இயக்குநர் - ப்ரியதர்ஷன்.
இசை: ஏ.ஆ.ரஹ்மான், டி. இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன்.
ஒளிப்பதிவு: பி. சி. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், சுதர்ஷன் சீனிவாசன், சத்யன் சூரியன், அபிநந்தன் ராமானுஜம், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சாரங், வி.பாபு, விராஜ் சிங்.
OTT தளம்: Netflix.

FC விமர்சனம்:
இப்படத்தில் மொத்தம் ஒன்பது கதைகள் எனவே ஒவ்வொரு கதையாக கதைச்சுருக்கம் & விமர்சனத்தை பார்ப்போம்.
1.எதிரி:
கதையின் துவக்கமே விஜய் சேதுபதி ஒருவரை அவர் வீட்டிற்குள்ளே சென்று அடித்து கொலை செய்கிறார். அதை அந்த நபரின் மனைவி பார்த்துவிட அந்த இடத்தை விட்டு செல்கிறார். யார் அந்த நபர்? ஏன் கொலை செய்தார்? பிறகு என்ன செய்தார்? என்பதே மீதிக் கதை.

விமர்சனம்:
கதையின் துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமாக ஏதோ நடந்திருக்கிறது அது என்ன? என்பது போல் கொண்டு செல்கிறார்கள். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி என மூவரின் நடிப்பை பற்றி சொல்லவா வேணும், இக்கதையில் யாருக்கும் பெரிய ஸ்கோப் இல்லை என்பது போல் தெரிந்தாலும், இவர்களின் யதார்த்தம் ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஒளிப்பதிவும், இசையும் மென்மை. எடிட்டிங் மிக அருமை. இதில் குறை என்னவேன்றால் படத்தின் தீம் கோபம், ஒரு சிறிய பிரச்சனை அதனை இந்த கோபத்தினால் ஒவ்வொருவரும் பெரியளவில் கொண்டு முடிக்கிறார்கள் என்பதெல்லாம் புரிகிறது. ஆனால், ஒரு கதை முழுமையடைந்தது போல திருப்தி இல்லை. பாதியில் முடிந்தது போல ஒரு உணர்வு. சுமார் ரகம்தான்...
FC RATING: 2 /5
2.சம்மர் ஆஃப் 92 (Summer of 92):
கதையின் துவக்கம் காமெடி நடிகராகவே வரும் யோகி பாபு அவரது படித்த பள்ளி விழாவிற்கு தலைமையேற்க வருகிறார். அப்போது அந்த மேடையில் வெறுப்புடன் அமர்ந்திருக்கும் லட்சுமி டீச்சர் (ரம்யா நம்பீசன்). விழாவில் கலந்துகொண்ட யோகிபாபு தனது 9-ஆம் வகுப்பை வருடங்களாக பாஸ் ஆகாமல் படித்தேன் என்பதை நினைவு கூர்ந்து பிளாஸ்பேக்கிற்கு செல்கிறார். அப்படி அவர் என்னென்ன கதைகள் சொன்னார்? ரம்யா நம்பீசன் ஏன் கோபமாக அமர்ந்திருக்கிறார்? என்பதே நகைச்சுவையான மீதிக் கதை.

விமர்சனம்:
இந்த கதை நகைச்சுவையை தீமாக வைத்து உருவாகியுள்ளது. அப்படி நகைச்சுவை இருக்கிறதா என்றால்? ஆம் ரசிக்கும்படி இருக்கிறது. கேரளாவில் படமாக்கி இருப்பார்கள் போல, இதில் வரும் இடங்கள் எல்லாம் அவ்வளவு அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரத்திற்கு வாழ்த்துக்கள். யோகி பாபு துவக்கத்தில் கதை சொல்ல ஆரம்பிப்பாரே தவிர அவர் வரும் காட்சிகளில் காமெடி அவ்வளவாக இல்லை. யோகிபாபுவின் சிறு வயது கதாப்பாத்திரமாக வரும் சக்திவேல் அருமையாக நடித்துள்ளார். மேலும், சீரியஸாகவே பார்த்துவந்த நெடுமுடி வேணு செமையாக நகைச்சுவை செய்துள்ளார். இவர்கள் தவிர ரம்யா நம்பீசன், அருள்தாஸ், Y.G. மகேந்திரன் மற்றும் பிளாஷ்பேக்கில் வரும் அனைவருமே(குறிப்பாக அந்த கிங்(நாய்)) அருமை. குறை என்னவென்றால் மாணவனை வாத்தியாரே பன்னி மூஞ்சி வாயா, பன்னி, நாய் என கூறுவது நகைச்சுவையாக நினைத்து எடுத்தாலும் கண்டிக்கக் கூடியது. அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். மற்றபடி அருமை...
FC RATING: 3.5 /5
3.ப்ராஜெக்ட் அக்னி (Project Agni):
மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடிக்கிறார் அரவிந்த் சாமி. அதை தனது நண்பரான இஸ்ரோவில் வேலைப்பார்க்கும் பிரசன்னாவிடம் கூற வீட்டிற்கு அழைக்கிறார். அவரும் வருகிறார், தனது கண்டுபிடிப்பை அவரிடம் கூறி, ப்ராஜெக்ட் அக்னி என்கிற திட்டம் அடங்கிய ஒரு பெட்டியை பிரசன்னாவிடம் கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்டு பிரசன்னா கிளம்பிவிட, அரவிந்த்சாமி தற்கொலை செய்ய முயல்கிறார். அந்த நேரத்தில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, கதவை திறக்கும் அரவிந்த் சாமிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. மீண்டும் பிரசன்னா வேறு கெட்டப்பில், உடன் மனைவியுடன் வந்து நிற்கிறார். எது எப்படி சாத்தியம்? அப்படி என்ன கண்டுபிடித்தார்? உண்மையில் முதலில் பிரசன்னா உருவில் வந்தது யார்? என்பதே மீதிக் கதை.

விமர்சனம்:
இப்படம் பார்கையில் உண்மையில் ஹாலிவுட் படமொன்றை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது போல ஒரு உணர்வு. செமையான சிந்தனை, மேக்கிங். வாழ்த்துக்கள் கார்த்திக் நரேன். ஆனால் என்ன ஒரு குறை டப்பிங் சரியாக செய்யாமல் விட்டார்களோ என்கிற நெருடல் தவிர்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஆங்கிலம் புகுந்து விளையாடுகிறது. அதனால் இது என்ன கதை? என்ன சொல்ல வராங்க? என்பதே சரியாக நம்மை வந்து சேரவில்லையோ என கண்டிப்பாக பலருக்கு தோன்றும். அதனாலே சற்று ஒட்டாமலே செல்கிறது. மற்றபடி ஒளிப்பதிவு, நடிப்பு, பின்னணி இசை எதிலும் குறையில்லை. ஆனால் கதைதான் புரியவில்லை...
FC RATING: 2.5 /5
4.பாயசம்:
1965 கும்பகோணம், உடையார்பாளையத்தில் ஒரு திருமணம் நடக்கிறது. இதில் வேண்டா வெறுப்பாக கலந்து கொள்ளும் டெல்லி கணேஷ், திருமணம் நடப்பது அவரது அவரது அண்ணன் மகனின் மகளுக்கு எனினும் ஒரு பொறிதல் மனதிற்குள், அது ஏன்? அப்படி என்ன காரணம்? என்பதே மீதிக் கதை.

விமர்சனம்:
ஒரு ஐயர் வீட்டு கல்யாணத்தை அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். நாம் அங்கு இருந்து பார்ப்பது போல உணர்வு. அவ்வளவு அழகான ஒளிப்பதிவு, அதற்கேற்ற பின்னணி இசை. நடிப்பு குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை, ஏனெனில் திருமண அவசரத்தில் எல்லாம் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். டெல்லி கணேஷ் எரிச்சலுடன், வேண்டா வெறுப்புடனும், அதே நேரம் சற்று நயந்தும் அருமையாக நடித்துள்ளார். அருவி பட நடிகை அதீதி பாலன் தோற்றம் நேர்த்தியாக இருந்தாலும், பெரிதாக முக்கியத்துவமும் இல்லை. யதார்த்தமான ஒரு திருமண நிகழ்வு அவ்வளவுதான்...
FC RATING: 3 /5
5.அமைதி (Peace):
ஈழப்போர் களத்தில் ஒருபகுதி அங்கு LTTEன் பாதுகாப்பு படை வீரர்களாக கௌதம் மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட நால்வர் இருக்கின்றனர். எதிரெதிர் துவங்களில் கையில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் இருதரப்பும் காத்திருக்க, அப்போது ஒரு சிறுவன் தனது தம்பி எதிர்புறம் இருப்பதாக கூறி செல்கிறான். அதை பார்த்து அவனை இவர்கள்(பாபி சிம்ஹா) இடத்திற்கு எடுத்து வந்து என்ன என்று விசாரிக்க, தனது தம்பி வீட்டில் மாட்டிக் கொண்டான் அவனை எப்படியாவது கூடிவர செல்கிறேன் என அந்த சிறுவன் கூறுகிறான். அவன் சொல்வதில் உருகிய பாபி சிம்ஹா எதிரணி அசந்த நேரத்தில் அழைக்க செல்கிறார். உண்மையில் அங்கு தம்பி இருந்தானா? அழைக்க சென்ற பாபி சிம்ஹா உயிருடன் வந்தாரா? என்பதே மீதிக் கதை.

விமர்சனம்:
ஈழப்போர் நினைத்தாலே கொலை நடுங்கும், அந்த களம் எப்படி இருக்கும் என்று சொல்லி கேட்கும் போது அங்கு வாழ்ந்த மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்குமென நினைத்தால் நம்முடல் வேர்க்கும். அப்படிபட்ட ஒரு விஷயத்தை விளையாட்டாக கையாண்டு விட்டாரோ கார்த்திக் சுப்பராஜ் என்கிற யோசனை மேலோங்கி நிற்கிறது. ஒருபுறம் பார்த்தல் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட போராட்டம்தான் என வருத்தமடைய வைத்தாலும், ஆழமாக சொல்ல வேண்டிய களத்தில் விளையாட்டாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். ஆனால், பாராட்டவேண்டிய விஷயம் என்னவென்றால் கடற்கரையில் ஒரு ஓரத்தில் குழி தோண்டி, மறைவிடமாக மாற்றி நம்மை அந்த களமாக லேசாக நம்ப வைத்திருக்கிறார். அதுஒன்றுதான் சிறப்பு, மற்றபடி ரொம்ப சுமார் ரகம்தான்...
FC RATING: 2.5 /5
6.ரௌத்திரம்:
கதையின் துவக்கத்தில் ஒரு கந்துவட்டிக்காரன் ஒரு கடைக்காரரிடம் மிரட்டி, அசிங்கமாக பேசி வட்டி பணத்தை வாங்கி வெளியே வருகிறான். அப்படி வெளியே வந்து வண்டியை எடுக்கும்போது ஒரு சிறுவன் சுத்தியலால் அவன் தலையில் அடித்து விட, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுகிறான். அந்தளவிற்கு அந்த சிறுவனுக்கு என்ன கொலைவெறி? அப்படி என்ன செய்தான் அந்த கந்துவட்டிக்காரன் என்பதே மீதிக்கதை.

விமர்சனம்:
நடிகர் அரவிந்த்சாமி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் இது. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதையிலோ, திரைக்கதையிலோ எதுவுமில்லை. படமுழுக்க கெட்ட வார்த்தைகளும், கேவலங்களும் தான். மேக்கிங் பரவாயில்லை. என்ன ஒரு பாராட்டுக்குரிய விஷயம் இரண்டு காலக்கட்டங்களில் படம் நகர்வதை கிளைமாக்ஸில் காட்டியவிதம் அருமை. மற்றபடி அரவிந்த்சாமி சார் நீ பேசாம நடிகராகவே இருந்திருக்கலாம், இல்லை நல்ல கதையை தேர்வு செய்திருக்கலாம் இதெல்லாம் ஓவர் சார். ஏழைகளை அந்தளவிற்கு கீழ்த்தரமாக சித்தரித்து காண்பித்தது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது...
FC RATING: 2 /5
7.இன்மை:
படத்துவக்கத்தில் நாயகியின்(வில்லியும் கூட) வீட்டிற்கு ஒருவன் வருகிறான், ஏதோ கையெழுத்து வாங்க வந்துருக்கேன் என கூறி வீட்டினுள் செல்கிறான். சிறிது நேரம் நாயகியை வசீகரிக்க பேசி கொண்டிருக்க, நாயகிக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் ஒரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. கையெழுத்து தொடர்பாக வர வேண்டியவன் வரவில்லை என தெரிய வர, வந்திருக்கும் நபர் யார் என்று அதிர்ச்சியுடன் நிற்கும் நாயகி. இறுதியாக வந்தவன் யார்? நாயகியை என்ன செய்தான்? என்பதே மீதிக் கதை.

விமர்சனம்:
இப்படத்தில் நடித்த சித்தார்த், பார்வதி திருவொத்து, அம்மு அபிராமி என அனைவரும் அருமையாக நடித்திருக்கின்றனர். அதிலும் அம்மு அபிராமி எப்படியெல்லாம் வில்லத்தனமாக கலக்குவாரா என்று சற்று ஆச்சர்யமாகவே தோன்றியது. அந்தவகையில் நடிப்பும், திரைக்கதையும் அருமை. குறையென்றால் இஸ்லாம் தீமுடன் சில விஷயங்கள் இடம்பெறுகின்றன. இது எந்தளவிற்கு அந்த மதத்தினர் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. மற்றபடி ஒருமுறை பார்க்கலாம்...
FC RATING: 2.75 /5
7.துணிந்த பின்:
நக்சலைட்டுகளை தேடி செல்லும் அதிரடிப் படையின் வீரன் (ஹீரோ) அதர்வா ஒருபுறம், துளைத்த தன் கணவனை தேடும் நாயகி அஞ்சலி மறுபுறம். நக்சலைட்டுகளை பிடிக்க சென்ற இடத்தில் வழக்கமான துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு அந்த அமைப்பின் முக்கியமான நபரை பிடித்துவர அவன் மீண்டும் தப்பிக்கிறான். மறுபுறம் கணவன் என்ன ஆனான் என்கிற அஞ்சலியின் தேடல் இவை இரண்டிற்கும் என்ன முடிவு? என்ன முடிவு? என்பதே மீதிக்கதை.

விமர்சனம்:
இந்த நவரசா சீரிசிலே படு மொக்கை இந்த பாகம்தான் என்ன சொல்ல வராங்க? எதுவுமே முழுமையில்லை. நக்சலைட்டுகளை பிடிக்க போறாங்க, பிடித்த ஒருத்தனை அசால்ட்டா தப்பிக்க விடறதும் என்ன திரைக்கைதையோ என்பதுபோல ஒரு நெருடல். கதை, திரைக்கதையில் ஏகப்பட்ட சிக்கல், கெட்ட வார்த்தைகள் ஏராளம் என ஏதோ துணிந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இப்படம் பார்க்க நமக்கு துணிவு அவசியம்தான்...
FC RATING: 2 /5
7.கிட்டார் கம்பி மேலே நின்று:
இசைக் கலைஞனாக வரும் நாயகன் சூர்யா, அவருடைய கனவு எப்படியாவது லண்டன் சென்று பெரியளவில் சாதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அவருடைய அம்மா வர மறுப்பதால் தள்ளிக்கொண்டே செல்கிறது. ஒருகட்டத்தில் ஒத்து கொள்கிறார் அதுவேறு. இந்நிலையில் சூர்யாவின் குழுவில் பாடவரும் நாயகி பிரயாகா மார்டின், ஒருகட்டத்தில் காதலியாக மாறுகிறார். இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? சூர்யா லண்டன் போனாரா? என்பதே மீதிக்கதை.

விமர்சனம்:
கௌதம் மேனன் படங்களுக்கே உரித்தான சில விஷயங்கள் இதிலும் தவறாமல் இடம்பிடித்துள்ளது. ஆனால் கௌதம் மேனனுக்கு உள்ள சிறப்பு காட்சியையும், நடிகர்களையும் எப்படித்தான் அழகாக காட்ட முடிகிறது என்பது தெரியவில்லை. அதிலும் நாயகி பிரயாகா மார்டின் பார்வையிலையே மயக்குகிறார். வாரணம் ஆயிரம் சூர்யா இன்னும் அதே இளமை ததும்ப வருகிறார். அவரது ரசிகர்கள் மிக ரசிக்கும் விதமாக கதாப்பாத்திரம் வடிவமைப்பு அமைந்துள்ளது. குறை என்னவென்றால், இதில் காட்சிகளை விட பாடல்கள் தான் அதிகம், அப்படி இருக்கையில் கௌதமிற்கே உரித்தான ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் என கூட்டணி அமைத்திருந்தால் இப்படம் வேற லெவல். ஆனால் தவறவிட்டுள்ளார், பாடல்கள் குறையில்லாமல் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. அதேபோல் பல காட்சிகளில் செயற்கைத்தனம் அதிகமாக எட்டிப்பார்ப்பது பெரும் நெருடல். இறுதியாக இப்படம் கௌதம் மேனன் ரசிகர்களுக்கு மட்டுமான விருந்து...
FC RATING: 3 /5
Leave Comments
Post a Comment